அரிசிலாற்றின் கரையில் அமைந்துள்ளதால் இத்தலம் 'திருஅரிசிற்கரைப்புத்தூர்' என்று வழங்கப்பட்டு தற்போது மருவி 'அளகாபுத்தூர்' என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் 'சுவர்ணபுரீஸ்வரர்' உயர்ந்த பாணத்துடன், பெரிய லிங்க வடிவில் மேற்கு நோக்கி காட்சி அளிக்கின்றார். 'படிக்காசுநாதர்' என்றும் அழைக்கப்படுகிறார். அம்பாள் 'சௌந்தர்ய நாயகி' என்னும் திருநாமத்துடன் பெரிய வடிவில் தரிசனம் தருகின்றாள். 'அழகாம்பிகை' என்ற பெயரும் உண்டு.
கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் சொர்ண விநாயகர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், மகாலட்சுமி, இரண்டு பைரவர்கள் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
கோயில் பிரகாரத்தில் சூரியனும், சந்திரனும் எதிரெதிர் திசையில் இருக்கின்றனர். அவர்கள் எதிரே ஒன்பது குழிகள் உள்ளன. அவையே நவக்கிரங்களாக வழிபடப்படுகின்றன.
சூரபதுமனை அழிக்க முருகப்பெருமான் போருக்குக் கிளம்பியபோது, மகாவிஷ்ணு அவருக்கு தன்னுடைய சங்கு, சக்கரத்தைக் கொடுத்ததால் இத்தலத்து முருகக் கடவுள் கையில் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். முருகனின் மயில் வலதுபுறமாக உள்ளது. வள்ளி, தெய்வானையும் உடன் உள்ளனர்.
புகழ்த்துணை நாயனார் வழிபட்டு முக்தியடைந்த தலம். வறுமையிலும் தவறாமல் சிவபூஜை செய்தபோது, ஒருநாள் அபிஷேகக் குடத்துடன் வந்தபோது, உடலில் வலுவின்றி அவர் கீழே விழ, குடம் சுவாமி மீது பட்டது. இறைவன் அசரீரியாக வந்து, நாயனாரின் வறுமையைப் போக்க தினமும் ஒரு படிக்காசு தருவதாகக் கூறினார். அதனால் இத்தலத்து மூலவருக்கு 'படிக்காசு அளித்த நாதர்' என்ற பெயரும் உண்டு. குடம் தவறி பட்ட தழும்பும் மூலவர் மீது உள்ளது. பிரகாரத்தில் நாயனார், அவரது மனைவி லெட்சுமி ஆகியோரது திருவுருவங்கள் உள்ளன.
மூவர் தேவாரமும் பெற்ற தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.
|